×

“நீங்க நல்லவரா.. கெட்டவரா..?” மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் ஆழ்ந்த மவுனம் ஏன்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: மக்களை பாதிக்கும் முக்கிய பிரச்னைகளில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனம் சாதிப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.  உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் பேரணி நடைபெற்ற நிலையில் உத்தரபிரதேச மக்கள் சார்பாக காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மோடிக்கு தன் கேள்விகளை முன்வைத்துள்ளார். “பொதுவாக பிரதமர் மோடி பெண் சக்தி, அவர்களுக்கு அதிகாரம் அளித்தல் பற்றி பேசுகிறார். ஆனால் அவர் தன் சொந்த கட்சியில் தொடர்ந்து பெண்களை தோல்வி அடைய வைத்துள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன் பாஜ மகிளா மோர்ச்சா தேசிய துணைத்தலைவர், பாஜவில் பெண் தொண்டர்கள் அவமதிக்கப்படுகிறார்கள், கடுமையாக நடத்தப்படுகிறார்கள் என்று கூறி பாஜவில் இருந்து வௌியேறினார். இதேபோல் உத்தரபிரதேச மொரதாபாத் மகிளா மோர்ச்சா தலைவி உள்ளூர் பாஜ தலைவர்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டார். அவர் நீதி கேட்டு சமூக ஊடகங்களை நாடினார். இந்திய மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஆண்டு நீதி கேட்டு போராடியபோது, மோடி அரசு தன் அரசியல் காரணங்களுக்காக வீராங்கனைகளுக்கு துரோகம் செய்தது.

விவசாய வளர்ச்சிக்கு பங்காற்றிய சவுத்ரி சரண் சிங், டாக்டர்.எம்.எஸ்.சுவாமி நாதன் ஆகிய இரண்டு தலைவர்களுக்கு மோடி அரசு நேற்று முன்தினம் பாரத ரத்னா விருது வழங்கியது. இந்த இரு தலைவர்களிடமும் மோடி வாய் விட்டு பேசினாலும், அவர் விவசாயிகளை தொடர்ந்து தோல்வியடைய செய்துள்ளார். மோடியின் ஆட்சியில் நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக 43 முறை அரசு பணி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்துள்ளன.

இதனால் 2 கோடி இளைஞர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. அண்மையில் உத்தரபிரதேச காவலர் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், 60 லட்சம் இளைஞர்களின் கனவு சீர்குலைந்தது. மோடியின் இரட்டை இஞ்சின் அரசு பெண்கள், இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க என்ன செய்து கொண்டுள்ளது. இதுபோன்ற மக்கள் பிரச்னைகளில் பிரதமர் மோடி தன் ஆழ்ந்த மவுனத்தை கலைத்து பேச வேண்டும்” என ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.

The post “நீங்க நல்லவரா.. கெட்டவரா..?” மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் ஆழ்ந்த மவுனம் ஏன்? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Congress ,PM Modi ,New Delhi ,Modi ,Uttar Pradesh ,General Secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?